Wednesday 2 October 2013

காமராசர் "நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும்" என்றார

 



தாய்பாசம்
காமராசர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை குமாரசாமி நாடார் காலமாகி விட்டார். எனவே தாயார் சிவகாமி அம்மையார்தான் காமராசரையும் அவர் தங்கையையும் வளர்த்தார்.

சிவகாமி அம்மையார் விருது நகரில் குடியிருந்தார். காமராசர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்தார். முதல்-அமைச்ச ராகஇருந்தபோதுதாயாருக்கு மாதம் ரூ. 150 மட்டும் மணியார்டர் மூலம் அனுப்பி வைப்பார்.

காமராசர் விருதுநகருக்கு போகும் போதெல்லாம் தாயாரைச் சென்று சந்திப்பதில்லை. பயணிகள் விடுதி (டிராவலர்ஸ் பங்களா)யில் தங்கிக் கொள்வார். மதுரையைக் கடந்து விருதுநகர் வழியாக காரில் நெல்லை நாகர்கோவில் போக நேரிடும் போதும் காமராசர் விருதுநகரில் தன் வீட்டுக்குச் சென்றதில்லை.

விருதுநகர் வழியாக ஒருமுறை பிரதமர் ஜவஹர்லால் திறந்த காரில் சென்றார். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம்! அப்போது கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேருவின் அருகே சென்று அதோ கூட்டத்தில் நிற்கிறாரே அவர் தான் சிவகாமி அம்மையார் என்று சொல்ல, நேரு காரை விட்டு இறங்கி சிவகாமி அம்மையாரிடம் சென்று நலம் விசாரித்தார்.

காமராசர் 9 ஆண்டுகள் முதல்-அமைச் சராக இருந்தபோது ஒரே ஒருமுறைதான் அவரது தாயார் சென்னைக்கு மகன் வீட்டிற்குச் சென்றார். திருப்பதிக்கு போய் சாமி கும்பிடணும் என்று தாயார் சொல்ல, போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு காமராசர் கோட்டைக்குச் சென்று விட்டார்.

காமராசரின் நேர்முக உதவியாளர் ஒரு தொழில் அதிபரின் காரில் சிவகாமி அம்மையாரைத் திருப்பதிக்கு அனுப்பி வைத்தார். அந்த விஷயம் தெரிய வந்த போது காமராசர் கோபப்பட்டு உதவியாளரைக் கடிந்து கொண்டார்.

கோபிச்செட்டிபாளையத்தில் காங்கிரஸ் மாதர் மாநாடு ஒன்று நடந்தது. இந்திராகாந்தி (அப்போது பிரதமராக அவர் இல்லை)யும் கலந்து கொண்டார். காமராசருக்குச் தெரியாமல் கோபி காங்கிரஸ் தலைவர்கள் சிவகாமி அம்மையாரையும் அழைத்து வந்திருந்தனர். தட்டுத் தடுமாறி அவர் மேடையில் ஏறும்போதுதான் தாயாரை காமராசர் கவனித்தார்.

தனது நேர்முக உதவியாளரை அழைத்த காமராசர் ``இவங்க எங்கே இங்கு வந்தாங்கன்னேன். விழா முடிஞ்சதும் நல்லபடியா அனுப்பி வைங்கன்னேன்' என்று கூறினார். தாயார் அருகே செல்லவும், இல்லை. பேசவும் இல்லை.

ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார். விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர்.

காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை. ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.

வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம் ஐயா அதோ அம்மா நிக்காங்க என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார். கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது, ``சௌக்கியமா அம்மா'' என்று காமராசர் கேட்டார்.

தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது. தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது.

முதல்-அமைச்சர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகி, 1967 தேர்தலில் காமராசர் விருதுநகரிலேயே தோற்கடிக்கப்பட்டார்.

அதன்பின் நாகர்கோவில் பாராளுமன்ற உறுப்பினரானார். அப்போது சென்னையில் இருந்த காமராசருக்கு, சிவகாமி அம்மையாருக்கு உடல் நலமில்லை என்று சேதி சொன்னார்கள்.

உடனே புறப்பட்டு விருதுநகர் வந்தார். (அப்போது மதுரை நெடுமாறன் பெருந் தலைவருடன் வந்தார்) தாயாரைக் கண்டார். மகனைக் கண்டவுடன் அந்த தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.எனவே காமராசர் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

தாயாரிடம் சொன்னார். போயிட்டு வாப்பா. ஆனால் நம் வீட்டில் சாப்பிட்டு விட்டுப்போ என்றார், அந்த தாயார் படுக்கையில் படுத்தபடி.

சரி சொன்ன காமராசர் அன்று தன் வீட்டில் சாப்பிட்டார். தாயாருக்கு அது பரம திருப்தி. தாயிடம் விடை பெற்ற பின் சென்னைக்கு புறப்பட்டார். உடன் பயணம் செய்த நெடுமாறன் "நீங்கள் வீட்டில் சாப்பிட்டு எவ்வளவு காலம் ஆயிற்று?'' என்று கேட்டார்.

சற்றே கண்ணை மூடிக்கணக்கு போட்ட காமராசர் நான் என் வீட்டில் சாப்பிட்டு 25 வருஷமாவது இருக்கும் என்றார்.தாயும் மகனும் 1942 ஆகஸ்ட் மாதம் பம்பாய் மாநகரில் அகில இந்திய செயற்குழு கூடியது. காமராஜ், சத்திய மூர்த்தி, பக்தவச்சலம் முதலியவர்கள் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்தனர். ``வெள்ளையனே வெளியேறு'' போராட்டம் அந்தச் செயற்குழுவில்தான் அறிவிக்கப்பட்டது.

மறுநாளே காந்தியடிகள், நேரு போன்ற தலைவர்களை வெள்ளைக்கார அரசு கைது செய்தது. மாநிலம் வாரியாக பிரபலங்களைக் கைது செய்யவும் முடிவு செய்தது.

ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்ட காமராஜ் நேரடியாகச் சென்னை சென்றால் வழியிலேயே கைது செய்யப்படலாம் என எதிர் பார்த்தார். தான் கைதாகும் முன் செயற்குழு முடிவைத் தமிழகம் எங்கும் அறிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஆந்திராவில் ரெயிலை விட்டு இறங்கி சில நாட்கள் தங்கினார். பின் சென்னைக்கு ரெயில் ஏறி னார். அரக்கோணம் ஸ்டேஷனிலேயே இறங்கினார். ஸ்டேஷன் பிளாட்பாரம் முழுக்க போலீஸ். அவர்கள் காமராஜை எதிர் பார்க்கவில்லை. அவர்கள் வேறு குறியாக இருந்ததால் காமராஜை கவனிக்க வில்லை.

காமராசர் அரக்கோணம் சோளங்கி புரம் ராணிப்பேட்டை கண்ணமங்கலம், வேலூர், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்குப் போனார். ஒவ்வொரு ஊரிலும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக ராமநாதபுரம் சென்றார். பின் அங்கிருந்து மானாமதுரை வழியாக விருது நகருக்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்தார்.

தலைவர், வீட்டுக்கு வந்திருக்கும் விஷயம் வெளியே தெரிந்து பிரமுகர்கள் அவரைத் தேடி வந்தனர். எனவே விருதுநகர் காவல் நிலையம் வரை விஷயம் பரவிற்று. அப்போது விருதுநகர் காவல் நிலையத்தில் எழுத்தச்சன் என்பவர் சப் இன்ஸ்பெக்டர்.

தன்னை எந்த நேரமும் கைது செய்து விடுவார்கள் என்பது காமராசருக்குப் புரிந்தது. தன்னைப் போலீஸ் கைது செய்யும்போது தொண்டர்கள் ஆவேசப் படலாம் என்றும் எதிர் பார்த்தார். உடனே விருதுநகர் காவல் நிலையத்துக்கு ``நான் வீட்டில்தான் இருக்கிறேன்! கைது செய்யலாம்'' என்று தகவல் அனுப்பினார்.

சப் இன்ஸ்பெக்டர் எழுத்தச்சன் தலைவர் வீட்டுக்கு வந்தார். ``ஐயா! கைது செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறது. நீங்கள் இப்போது அரியலூரில் தங்கி இருப்பதாக காவல் துறைக்கு ஒரு தகவல் வந்தது.

அதன்பேரில் உங்களைக் கைது செய்ய எங்கள் படை அரியலூர் விரைந்துள்ளது. உங்களைக் காணவில்லை என்று அவர்கள் திரும்பி வரச்சில நாட்கள் ஆகலாம். எனவே அதுவரை நீங்கள் விருது நகரில் இருக்கலாம். நாங்களும் கைது செய்ய மாட்டோம். எனவே இப்போது நான் உங்களைக் கைது செய்ய வரவில்லை'' என்றார் எழுத்தச்சன்.

``வெளியே என் வேலைகள் முடிந்து விட்டன. இன்றே நான் உள்ளே (சிறைக்கு) வரத்தயார். தாமதிக்காமல் கைது செய்யுங்கள்'' என்றார் காமராசர்.

அப்படியானால் சரி என்ற எஸ்.ஐ. காமராசரைக் கைது செய்து அழைத்துப் போனார். அப்போது ஜெயிலுக்கு போனவர் மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் வெளியே வந்தார். வெள்ளை அரசாங்கம் போட்ட வழக்கில் நீதிமன்றம் காமராசருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.(வெளியே வந்த பின்னரும் காமராசர் தனது ஜெயில் வாழ்க்கையைப்பற்றி மேடைகளில் பேசியதில்லை. பத்திரிகைகளில் எழுதியதில்லை. எழுத்தச்சன் பரிவுடன் நடந்து கொண்ட தால் அவரின் பெயரும் காமராசரின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது)

ஒரு சமயம் காமராஜரும் நேருவும் தென்மாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள காரில் விருதுநகர் வழியாக சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு மூதாட்டி விருதுநகரில் ரோட்டின் ஓரமாக பொதுமக்களோடு நின்று அவர்கள் செல்வதை கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது நேரு தன் அருகே இருந்த காமராஜரிடம் அங்கே ரோட்டின் ஓரமாக நிற்கும் பெண்ணை பற்றி தெரியுமா? என்று கேட்டார். உடனே காமராஜர் அது என் தாய் தான் என்று கூறினார்.
உடனே நேரு காரை நிறுத்தச் சொல்லி வண்டியை ரிவர்சில் எடுக்கச் சொன்னார். கார் அந்த மூதாட்டி அருகே வந்ததும் காரில் இருந்து இறங்கி காமராஜரின் தாயாரின் (சிவகாமி அம்மாள்) கையை பிடித்து அந்த அற்புத மனிதரை பெற்ற தாயார் நீங்கள் தானா? என்று பாசத்துடன் கேட்டார்.

இதை அங்கு கூடி இருந்தவர்கள் கண்டு பரவசம் அடைந்து ஆனந்த கண்ணீர்வடித்தனர்.

இதைப்படிப்பவர்களுக்கு சற்று மணம் கணக்கவேண்டும் .....அந்த தலைவன் வாழ்ந்த மண்ணில் தானே நாமும் வாழ்கிறோம் .


(இந்த அருமையான பதிவை எழுதியவர் திரு.ரத்தினவேலு அவர்கள்)

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 comments:

Post a Comment

 

Copyright @ 2013 Welcome to www.trichytrs.blogspot.com.

Designed by Templateify & Sponsored By Twigplay